காங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


காங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு:  சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x
தினத்தந்தி 4 May 2024 3:11 PM IST (Updated: 4 May 2024 5:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார். இவர் கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியளவில் கரைசுத்து புதூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயக்குமாரின் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, மாயமான ஜெயக்குமார் அருகே உள்ள தோட்டத்தில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, உயிரிழந்த ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த 30ம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வீடு அருகே இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றையும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தத்தை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்படுவது சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் (காங்கிரஸ்) மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்ய துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம்-ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம்-ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story