"திராவிட மாடல் ஆட்சியில் சமத்துவமும், சகோதரத்துவமும் உள்ளது" - கி.வீரமணி
“திராவிட மாடல் ஆட்சியில் சமத்துவமும், சகோதரத்துவமும் உள்ளது” என்று நெல்லை பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கூறினார்.
நெல்லை தச்சநல்லூர் சாவடி திடலில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காசி தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் வேலாயுதம், மாவட்ட அமைப்பாளர் குணசீலன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். திராவிடர் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் குறித்தும், சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம். மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் போதாது. சமத்துவமும், சகோதரத்துவமும் இருக்க வேண்டும். இது திராவிட மாடல் ஆட்சியில் உள்ளது. மனித நேயத்தோடு மக்களை நாடுகிறது இந்த ஆட்சி.
நிதி நெருக்கடியிலும் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திராவிட மாடல் ஆட்சி. சேதுசமுத்திர திட்டத்தை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் பொருளாதாரம் வளரும், அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, திராவிடர் கழக மகளிர் அணி செயலாளர் பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.