ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்
24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அம்பத்தூர், மாதவரம், அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். சென்னை வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது களத்தில் நின்று பணியாற்றினோம், ஆனால் இன்று குறை கூறுபவர்கள் யாரும் களத்தில் இல்லை.
சமக தலைவர் சரத்குமாருக்கு பாஜக-வுடன் இணையும் நோக்கம் உள்ளதால் தான் பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை என்ற கருத்தை கூறி உள்ளார். ஆசியாவின் ஜோதி என்று உலக நாட்டு மக்களால் போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு, உலக சமாதானத்தை பற்றி பேசினார்.
பாஜக அரசு உள்ளூர் சமாதானத்தை பற்றிக் கூட பேசவில்லை. மதத்தை மையப்படுத்தி வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் ஒருவரால் எப்படி ஆசிய ஜோதி போன்ற பட்டத்தை பெற முடியும். கொள்கை இல்லாத கட்சிகள் தான் பாஜகவுடன் கூட்டணி வைக்கும்; கொள்கை உள்ள கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.