'அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம்'


அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம்
x
தினத்தந்தி 13 Sept 2023 1:00 AM IST (Updated: 13 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

செலவடை ஊராட்சியில் அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம் என்று பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

சேலம்

தாரமங்கலம்:-

செலவடை ஊராட்சியில் அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம் என்று பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

வீட்டு மனை பட்டா

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் செலவடை கிராமம் அழகாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சாந்தி (35), சின்னபொண்ணு (55), சுதா (35). இவர்களுக்கு சொந்தமாக நிலம் மற்றும் வீடு இன்றி தற்காலிகமாக ஓடை புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் கரட்டுப்பட்டியில் வீடுகட்ட வீட்டுமனை பட்டாவை மாநில அரசு வழங்கியது.

மேலும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வீடு கட்ட அவர்கள் 3 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு ஏற்கனவே வேறு ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பயனாளிகள் 3 பேரும் வீடு கட்ட அரசு அனுமதி வழங்கியும், கையில் வீட்டுமனை பட்டா இருந்தும், நிலம் இல்லாத நிலையில் வீடு கட்ட முடியாமல் பரிதவித்து வந்தனர். வீடு கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், கடந்த ஓராண்டாக வீடு கட்ட முடியாமல் தள்ளிப்போன நிலையில் வீட்டுக்கான அனுமதியை அரசு அதிகாரிகள் ரத்து செய்வதாக கூறியதால் ேமலும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஓமலூர் எம்.எல்.ஏ. விசாரணை

பயனாளிகள் 3 பேரும் இது பற்றி ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணியிடம் நேரில் சென்று முறையிட்டனர். இத்தகைய குளறுபடியை விசாரிக்க தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மணி எம்.எல்.ஏ. வந்தார். அங்கு அவர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவிச்சந்திரன், விஜயலட்சுமி மற்றும் செலவடை ஊராட்சி மன்ற தலைவர் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பயனாளிகள் 3 பேருக்கும் வருவாய்த்துறை மூலம் மாற்று இடம் தேர்வு செய்து அங்கு அவர்களுக்கு வீடு கட்டி கொள்ள உரிய அனுமதியை வருவாய் துறையினரிடம் பேசி பெற்று தந்து உதவுவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். இந்த ஆண்டாவது இந்த பயனாளிகளுக்கு பட்டாவுக்கு நிலமும், வீடும் கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story