லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான விவகாரம்: தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், தேனி மருத்துவ கல்லூரி முதல்வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் டாக்டர் மீனாட்சிசுந்தரம் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன் நடத்துபவர்கள் சிலா் அவரிடம் கட்டு, கட்டாக பணம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், 'தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்படும் 4 தனியார் கேண்டீன்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குங்கள். எங்களால் கேண்டீனை நடத்த முடியவில்லை. நீங்கள் ரூ.10 லட்சம் கேட்டீர்கள். ரூ.6 லட்சம் கொடுத்துவிட்டோம். மீதி ரூ.4 லட்சம் கொண்டு வந்து இருக்கிறோம். வாங்கி கொள்ளுங்கள்' என்று சிலர் முதல்வரிடம் கூறுகின்றனர். அதற்கு மருத்துவமனை முதல்வர், 'நான் வாங்கி கொள்கிறேன். வேண்டாம், நான் சொன்ன வேலையை முடியுங்கள்' என்று கூறுகிறார்.
அப்பட்டமான பொய்
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரத்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
என்னிடம் லஞ்சம் கொடுப்பதாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ அப்பட்டமான பொய். நான் யாரிடமும் பணம் பெறவில்லை. மருத்துவமனை, கல்லூரிக்கே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், கேண்டீன்களுக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் அனுமதியின்றி எடுக்கப்பட்டது. இதனை நான் கண்டுபிடித்து குடிநீர் இணைப்பை துண்டித்ததுடன். மீட்டர் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தேன்.
மேலும் கேண்டீன் செயல்பட அனுமதிக்கப்பட்ட அளவை விட மருத்துவமனை இடத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனையும் அகற்றும்படி உத்தரவிட்டேன். இதனை மனதில் வைத்து கொண்டு எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி உள்ளனர். இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே லஞ்ச வீடியோ வெளியான நிலையில், அவரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் சென்று உணவக உரிமையாளரிடம் வெளியான செய்தி உண்மையானதா? என்று விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
விசாரணையின் அடிப்படையில் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரிய வந்த காரணத்தினால், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், தற்காலிக பணி இடைநீக்கம் செய்யவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.