தேனி கலெக்டர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளிக்க முயற்சி : கந்து வட்டி கொடுமை என புகார்


தேனி கலெக்டர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளிக்க முயற்சி : கந்து வட்டி கொடுமை என புகார்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 11:56 AM GMT)

தேனி கலெக்டா் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளிக்க முயன்றார்.

தேனி

தீக்குளிக்க முயற்சி

தேனி சிவராம்நகரை சேர்ந்த கோபால் மகன் தங்கபாண்டியன் (வயது 32). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு தான் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்த வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தங்கபாண்டியனை தடுத்து நிறுத்தினர்.

தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், 'நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா கால கட்டத்துக்கு பிறகு வீட்டில் இருந்தபடி வேலை பார்க்கிறேன். நான் கடந்த 2021-ம் ஆண்டு ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினேன்.

கந்துவட்டி

அவர் பா.ஜ.க. நிர்வாகியாக உள்ளார். அவருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் வட்டி கட்டி வந்தேன். பின்னர் என்னால் வட்டி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் அவரும், சிலரும் சேர்ந்து எனது நிலத்தை அபகரித்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதால் தீக்குளிக்க முயன்றேன்' என்றார். பின்னர் அவரை போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story