காய்கறி கடையில் பணம் திருட்டு
கடையநல்லூரில் காய்கறி கடையில் பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
கடையநல்லூர்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்தவர் சேவியர் கபில். இவர் கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிச் சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் இணைக்கப்பட்டுள்ள 2 இன்வெர்ட்டர்கள், 3 பேட்டரிகள், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்ததும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி ஹார்ட்டிஸ்க் மற்றும் வயர்கள் அறுக்கப்பட்டு கழற்றிச் சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் சேவியர் கபில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.