செஞ்சிகோவிலில் நகை, பணம் திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
செஞ்சி கோவிலில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செஞ்சி,
செஞ்சி சிறுகடம்பூர் மந்தைவெளி பகுதியில் பிரச்சித்தி பெற்ற விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், விசாலாட்சி அம்மன் சன்னதில் இருந்த 4 கிராம் நகையை திருடினர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன், வினோத் ஆகியோரது வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடிச் சென்றதுடன், அதேபகுதியை சேர்ந்த அன்பழகன், நாகராஜ் ஆகியோரது வீடுகளிலும் திருட முயன்றுள்ளனர். இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுகடம்பூர் பகுதி தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மர்மநபர்கள் 3 பேர் முகமூடி அணிந்து, கையில் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களுடன் வீடுகளில் திருடிவிட்டு செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். தொடர் திருட்டு சம்பவங்களால் செஞ்சி மக்கள் பீதியில் உள்ளனர்.