வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டு
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டின் பூட்டு உடைப்பு
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 51). இவர் சென்னையில் துப்பறியும் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தாமோதரனின் மனைவி சரஸ்வதி வசித்து வருகிறார். அவரும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த 10-ந்தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை தாமோதரனின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து தாமோதரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
நகை, பணம் திருட்டு
இதையடுத்து தாமோதரன் பெரம்பலூரில் வசிக்கும் தனது தம்பி கரிகாலனை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். கரிகாலன் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ கீழே தள்ளி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து, அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.