ஜவுளி, செல்போன் கடைகளில் திருட்டு


ஜவுளி, செல்போன் கடைகளில் திருட்டு
x

கன்னிவாடியில் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஜவுளி, செல்போன் கடைகளில் திருடினர்.

திண்டுக்கல்

செல்போன் கடை

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோட்டை கருப்பண்ண சாமி கோவில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ளது. செம்பட்டி-ஒட்டன்சத்திரம் மெயின்ரோட்டில் உள்ள இந்த கோவில் வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜா.

நேற்று முன்தினம் இரவு இவர், கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை கடையை திறந்து ராஜா உள்ளே சென்றார். அப்போது ஓடுகளால் வேயப்பட்டிருந்த மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 20 செல்போன்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம், செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது.

துணிகள் திருட்டு

இதேபோல் ராஜாவின் கடை அருகே, கன்னிவாடியை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.19 ஆயிரம், 20 கைலிகள், 15 சட்டைகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

காலையில் கடையை திறந்த நாகராஜன் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்தடுத்து 2 கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜாவின் செல்போன் கடையில் ஏற்கனவே திருட்டு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story