ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில்நாளைமறுநாள் கும்பாபிஷேகம்


ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில்நாளைமறுநாள் கும்பாபிஷேகம்
x

கைகாட்டி வெள்ளார் வசந்தம்நகரில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்

மேச்சேரி

தீர்த்தக்குட ஊர்வலம்

மேச்சேரி அருகே கைகாட்டி வெள்ளார் வசந்தம்நகரில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது.

பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். காளிகவுண்டனூர் விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பசு, குதிரை, காளை முன்வர மேளதாளம், கேரள செண்டை மேளம் முழங்க வாணவேடிக்கையுடன் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

பட்டிமன்றம்

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மாலை 5 மணி முதல் யாகவேள்வி தொடங்குகிறது. வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பூமிபூஜை ஆகியன நடக்கிறது. இரவு 7 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம் நடக்கிறது.

நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகவேள்வியும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேட்டூர் கலா பிரதர்ஸ் நாட்டியாலயா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

நாளைமறுநாள் கும்பாபிஷேகம்

தொடர்ந்து நாளை மறுநாள் காலை 6 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி ஆரம்பம், காலை 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீப ஆராதனை, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது. ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நாளைமறுநாள் வரை கோவிலில் தினமும் சிறப்பு அன்னதானம் நடந்து வருகிறது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகம், பொருளாளர் வசந்தா, தலைவர் முருகேசன், செயலாளர் நாகநந்தினி மற்றும் ராமபக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளையினர், கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story