தொழிலாளியின் காதை கடித்த வாலிபர்
கோழிக்குஞ்சுகள் இறந்த தகராறில், தொழிலாளியின் காதை கடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
6 கோழிக்குஞ்சுகள் சாவு
வடமதுரைைய அடுத்த செங்குறிச்சி அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் காந்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், தனது வீட்டில் கோழி குஞ்சுகளை வளர்த்து வந்தார். இதில், 6 குஞ்சுகள் வீட்டின் அருகே இறந்து கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த காந்தி, அவருடைய மனைவி அமுதா, மகள் ராஜேஸ்வரி ஆகியோர் தங்கள் கோழி குஞ்சுகளை யாரோ கொன்று விட்டதாக கூறி வீட்டுக்கு வெளியே நின்று சத்தம் போட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (19), அவரது உறவினர் பூமயில் (23) ஆகியோர் தங்களை தான் திட்டுகிறாயா? என்று கேட்டு காந்தியிடம் தகராறு செய்தனர்.
காதை கடித்த வாலிபர் கைது
தகராறு முற்றிய நிலையில் காந்தியை தாக்கி செல்வகுமார் கீழே தள்ளினார். பின்னர் 2 பேரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். அப்போது காந்தியின் காதை செல்வக்குமார் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காந்தி வலியால் துடித்தார். காதில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதனைக்கண்ட அமுதா, ராஜேஸ்வரி ஆகியோர் செல்வகுமாரை தடுத்தனர். ஆனால் அவர்களையும் செல்வக்குமார் தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே காயம் அடைந்த காந்தி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் காந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வகுமார், பூமயில் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்தார். இதில் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.