நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி - செல்லூர் ராஜு புகழாரம்
ராகுல்காந்தி உணவருந்தும் வீடியோவை எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜு பதிவிட்டுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடந்துவரும் நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரசின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வது, பொதுமக்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என எளிய மக்களோடு சகஜமாக பழகி வருகிறார்.
தமிழகத்திற்கு வந்தபோது கூட ஸ்வீட் கடையில் சாதாரணமாக சென்று ஸ்வீட் வாங்கி பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது, உத்தரப்பிரதேசத்தில் சலூன் கடைக்குச் சென்று முக சவரம் செய்து கொண்டது என ராகுல் காந்தியின் பிரசார யுத்தி வேறு மாதிரியாக இருக்கிறது.
இந்த நிலையில் உணவகம் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு சக வாடிக்கையாளர்களுடன் சகஜமாக அமர்ந்து உணவருந்தியதோடு ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில்தான் அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டி இருக்கிறார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
இந்த நிலையில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு, ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து 'நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்த போது 'காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் எளிமையாக யார் இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுவேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு அவர் சமீபத்தில் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லூர் ராஜுவின் பதிவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாக்கூர் எக்ஸ் தள பதிவில், அண்ணனுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க.வு.,க்கு எதிராக களத்தில் இருக்கிறது. மேலும் பா.ஜனதா தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல்காந்தியை பாராட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.