2024-ம் ஆண்டு தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும்
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது, தி.மு.க. அரசுதான். 2024-ம் ஆண்டு தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது, தி.மு.க. அரசுதான். 2024-ம் ஆண்டு தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.
அமித்ஷா பேச்சு
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின், நடைப்பயணத்தை ராமேசுவரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்து பேசியதாவது:-
உலகின் பழமையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராமேசுவரம் பூமியானது இந்து மதத்தின் சின்னமாக இருக்கிறது.
இந்த புண்ணிய தலத்தில் இருக்கும் மக்களுக்கு எனது இருகரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கிறேன். இந்த யாத்திரை, வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. இது, பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் செயல்படுத்திய நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வர இந்த நடைபயணம் உதவும். பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பழமை, சிறப்பை உலகின் பல மேடைகளில் முழங்கி வருகிறார். ஐ.நா. சபையில் தமிழின் பெருமையை பேசிய ஒரே தலைவர் மோடி மட்டும்தான். ஜி-20 மாநாட்டின் முத்திரை வாசகம் கூட யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதுதான்.
தமிழ் சங்கமம்
திருக்குறள் தந்த வள்ளுவருக்கு சிலை நிறுவப்படும் என்றும், மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 21-ந் தேதியை இந்திய தேசிய மொழிகள் தினம் எனவும் மோடி அறிவித்தார். இலங்கையில் தமிழர்களின் நலனுக்காக ரூ.120 கோடி செலவில் கலாசார மையத்தை திறந்து வைத்தார்.
காசி-தமிழ் சங்கமம், சவுராஸ்டிரா சங்கமம் மூலம் தமிழை இந்தியாவின் வடக்கிலும், மேற்கிலும் பரப்பி வருகிறார். பப்புவா நியூ கினி நாட்டிற்கு சென்ற மோடி, அந்த நாட்டின் மொழியில் திருக்குறளை வெளியிட்டார். தமிழின் வீர அடையாளமான செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டு உள்ளது.
எதிர்கட்சிகள் இப்போது உருவாக்கி இருக்கிற கூட்டணி, கடந்த கால யு.பி.ஏ. கூட்டணிதான். பல ஆயிரம் கோடி ஊழல் செய்தவர்கள் இப்போது மீண்டும் ஒன்று கூடி இருக்கிறார்கள். நான் காங்கிரஸ் கட்சிக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இருவரும் இணைந்து மக்களிடையே ஓட்டு கேட்க சென்றால் அவர்களுக்கு நீங்கள் செய்த ஊழல்கள்தான் ஞாபகத்துக்கு வரும். 2 ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், காமன்வெல்த் ஊழல், விண்வெளி திட்டங்களில் ஊழல் என சொல்லிக்கொண்டே போகலாம். மக்கள் அதையெல்லாம் மறக்கமாட்டார்கள்.
தீவிரவாத பிடியில் இந்தியா சிக்காமல் இருக்கவும் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரசும், தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்தன.
இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கு இவர்கள் கூட்டணிதான் உடந்தையாக இருந்தார்கள். தமிழக மீனவர்களுக்கும் இவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள்.
சோனியாவுக்கு, ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும். லாலு பிரசாத்துக்கு தேஜஸ்வியையும், மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனையும், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனையும் முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதே கொள்கை.
ஆட்சிக்கு பூகம்பம்
நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் எது என்றால் அது தி.மு.க. அரசாங்கம் தான். அமலாக்கத்துறையால், ஊழல் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தாலும், இன்னும் அமைச்சராகத்தான் இருக்கிறார். அதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்கலாமா? அந்த அமைச்சர் ராஜினாமா செய்து இருக்க வேண்டாமா? அவர் ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தாலும், அதனை ஸ்டாலின் ஏற்கமாட்டார். அவருக்கு தெரியும், கடிதத்தை ஏற்று கொண்டால் நம்மை பற்றிய ரகசியம் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்று அச்சப்படுகிறார்.
அண்ணாமலை ஒரு டுவிட் போட்டாலே, தி.மு.க. ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. ஆனால் அண்ணாமலை அனைத்து சட்டசபை தொகுதிக்கும் பாதயாத்திரை செல்ல போகிறார். இதன் மூலம் இந்த ஆட்சிக்கு என்னனென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நான் ஸ்டாலினை கேட்கிறேன், நீங்கள் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது?.
தமிழகத்தில் மாற்றம்
மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி நடந்தது. அப்போது தமிழகத்திற்கு கிடைத்த தொகை ரூ.9 லட்சத்து 41 ஆயிரம் கோடி. ஆனால் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் அதனைவிட நான்கு மடங்கு தொகை அதிகம் கிடைத்து இருக்கிறது. அதற்கான கணக்கினை நான் தருகிறேன். சாலை அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி, மெட்ரோ ரெயிலுக்கு ரூ.73 ஆயிரம் கோடி, ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.34 ஆயிரம் கோடி, சென்னை-மைசூர், கோவை இடையே 2 வந்தே பாரத் ரெயில்கள், ரூ.100 கோடியில் மின்னனு சாதனம் அமைக்கும் தொழிற்சாலை, ரூ.1000 கோடியில் ராணுவ தளவாடம் அமைக்கும் தொழிற்சாலை, 46 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 86 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 1 கோடியே 85 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை, 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி, 15 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு வசதி திட்டம், மருத்துவ கல்லூரிகள் என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 2024-ம் ஆண்டு மீண்டும் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார். அப்போது தமிழகத்திலும் மாற்றம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.