அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்


தினத்தந்தி 17 Jan 2024 7:19 AM IST (Updated: 17 Jan 2024 6:46 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மதுரை,

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். போட்டியில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Live Updates

  • 17 Jan 2024 2:13 PM IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்று நிறைவடைந்து உள்ளது. 6 சுற்றுகளில் இதுவரை 430 காளைகள் இறக்கி விடப்பட்டு உள்ளன.

    இவற்றில், 143 காளைகள் பிடிபட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, 7-வது சுற்று தொடங்கி உள்ளது. வீரர்கள் மஞ்சள் நிற டி-சர்ட்டில் இறங்கி உள்ளனர்.

  • 17 Jan 2024 1:54 PM IST

    ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பின்னர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தடியடியில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  • 17 Jan 2024 12:58 PM IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... 6-வது சுற்று விறுவிறுப்பு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தற்போது 5-வது சுற்று நிறைவடைந்து 6-வது சுற்று நடைபெற்று வருகிறது. பச்சை நிற சீருடையில் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    5 சுற்று வரை மொத்தம் 363 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதில் 124 காளைகள் பிடிக்கப்பட்டுள்ளன. 5-வது சுற்றில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 6-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

    அபிசித்தர் மற்றும் திவாகர் ஆகிய இரு மாடுபிடி வீரர்களும் தலா11 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளனர். தலா 7 காளைகளை அடக்கி பாலமுருகன் மற்றும் தமிழரசன் இருவரும் 2-வது இடத்தில் உள்ளனர்.

    தற்போது வரை மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

     

  • 17 Jan 2024 11:56 AM IST

    விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 5-வது சுற்று...

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது 5-வது சுற்று நடைபெற்று வருகிறது. ஆரஞ்சு நிற சீருடையில் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    இதுவரை மொத்தம் 302 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 4-வது சுற்றில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 5-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

    தற்போது வரை மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், காவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 21 பேர்காயமடைந்துள்ளனர்.

    கரடிக்கல்லை சேர்ந்த சுரேந்தர் ஒரே சுற்றில் 5 காளைகளை பிடித்து அசத்தினார். சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 11 காளைகளை அடக்கி முதல் இடத்திலும், 7 காளைகளை அடக்கி பாலமுருகன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

     

  • 17 Jan 2024 10:43 AM IST

    விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 4-வது சுற்று

    ஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது சுற்று முடிவடைந்து தற்போது 4-வது சுற்று நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றின் முடிவில் 205 காளைகள் களம் கண்டன. 3-வது சுற்றில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

    தற்போது வரை 19 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 3 பேர் காவலர்கள் இருவர், பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

    சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 11 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார்.  

  • 17 Jan 2024 9:21 AM IST

    ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது சுற்று முடிவடைந்து தற்போது மூன்றாவது சுற்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது சுற்றில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

    மூன்றாவது சுற்றில் சாம்பல் நிற சீருடையுடன் 50 வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். தற்போது வரை 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

    சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் 8 காளைகளை அடக்கி முன்னிலை வகிக்கிறார். 

  • 17 Jan 2024 9:03 AM IST

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், போட்டியை பார்ப்பதற்காக நடிகர் அருண்விஜய் அலங்காநல்லூருக்கு வருகை தந்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

    ”ஜல்லிக்கட்டு போட்டியை முதல் முறையாக நேரில் பார்க்க வந்துள்ளேன். போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. உயிரை பணயம் வைத்து விளையாடி வருகிறார்கள். இந்த போட்டிக்கு ஈடே கிடையாது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜல்லிக்கட்டு போட்டிகள் வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.” என தெரிவித்தார்.  

  • 17 Jan 2024 8:11 AM IST

    ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்று முடிவடைந்து தற்போது இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2 காளைகளை அடக்கிய சரவணக்குமார் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

    இரண்டாவது சுற்றில் பிங்க் நிற சீருடையில் 50 வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் சுற்று முடிவில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.

  • 17 Jan 2024 7:50 AM IST

    ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். 


Next Story