ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கோவில்பட்டி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ெரயில் நிலையத்திற்கும், சாத்தூர் ெரயில் நிலையத்திற்கும் இடையே சின்ன கொல்லப்பட்டி ெரயில்வே தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி தர்ம சுந்தர், தூத்துக்குடி ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன், ஏட்டு அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ெரயிலில் இருந்து தவறி விழுந்தவர் திருச்சி மாவட்டம் லால்குடி வடுகை கிராமத்தைச் சேர்ந்த சப்பானி மகன் பாலு (வயது 45) என்பது தெரியவந்தது. இவர் நாகர்கோவிலில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து நாகர்கோவில் செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்துள்ளார். அதிகாலையில் வாசல் கதவு அருகில் நின்று கொண்டிருந்த அவர், ெரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவரது பிணத்தை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் அவருடைய மைத்துனர் ரஜினி, பாலு உடலை அடையாளம் காட்டி பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு சென்றார்.