ராேமசுவரத்தில் பா.ஜனதா சார்பில் விழா மேடை அமைக்கும் பணி தொடங்கியது
வருகிற 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரை பயணம் மேற்கொள்வதால் ராமேசுவரத்தில் பா.ஜனதா சார்பில் விழா மேடை அமைக்கும் பணி தொடங்கியது.
ராமேசுவரம்,
வருகிற 28-ந்தேதி அண்ணாமலை பாதயாத்திரை பயணம் மேற்கொள்வதால் ராமேசுவரத்தில் பா.ஜனதா சார்பில் விழா மேடை அமைக்கும் பணி தொடங்கியது.
பாத யாத்திரை
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் ராமேசுவரத்தில் இருந்து வருகின்ற 28-ந்தேதி பாத யாத்திரை பயணத்தை தொடங்குகின்றார். இதையொட்டி ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் பொதுக்கூட்ட மேடை, பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பவர் நாகேந்திரன், ஆத்ம கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர், மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் கதிரவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஜெயந்தி, மாநில மகளிர் அணி தலைவி கலா ராணி, நகர் பொருளாளர் சுரேஷ், நகர் பொதுச்செயலாளர்கள் முருகன், செல்வம், ஓ.பி.சி. அணி நகர்தலைவர் சங்கிலி குமரன், பிரசார அணி தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது:-
மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற 28-ந் தேதி அன்று ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரை நிகழ்ச்சியை தொடங்க இருக்கின்றார். மாநிலத் தலைவரின் இந்த யாத்திரை நிகழ்ச்சியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கின்றார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த யாத்திரை பயண நிகழ்ச்சி முடிவடையும்போது தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி அசைக்க முடியாத கட்சி என்ற ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வருகின்ற 2024-ல் நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு அரசியல் புரட்சியை பாரதீய ஜனதா கட்சி ஏற்படுத்தும். அது போல் இந்த யாத்திரை பயண நிகழ்ச்சியானது தமிழகம் முழுவதும் 4 கட்டமாக நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக ராமேசுவரத்தில் இருந்து தொடங்கும் இந்த நிகழ்ச்சியானது கன்னியாகுமரியில் முடிவடைகின்றது. தமிழகத்தில் 10 இடங்களில் இந்த யாத்திரை நிகழ்ச்சியில் பெரிய அளவில் பொதுக்கூட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பா.ஜ.க கட்சியின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.