சிறு தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
சிறு தேர்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தா.பழூர்:
ஆடிப்பெருக்கு விழா
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது தேவையான அளவு தண்ணீர் வரத்து உள்ளது.
இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை மிக உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். மேலும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பர தட்டி என்று அழைக்கக்கூடிய சிறு தேரை வைத்து சிறுவர்கள் குதூகலமாக விளையாடி மகிழ்வார்கள்.
சப்பர தட்டி
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் விமரிசையாக கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ள நிலையில், விழா கொண்டாடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லாததால் தொழிலாளிகள் மிகுந்த உற்சாகத்தோடு சப்பர தட்டியை தயார் செய்து வருகின்றனர்.
ஒரு சப்பர தட்டி அளவைப் பொறுத்து ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தா.பழூர் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் சப்பர தட்டிைய தயாரித்து விற்பனைக்காக வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.