பொங்கல் பானை, விறகு அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரம்
வடகாடு அருகே பொங்கல் பானை, விறகு அடுப்பு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்பாண்ட தொழிலாளர்கள்
வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் வடக்கு பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் மண்பாண்டங்களை தயாரிக்க தேவைப்படும் களிமண்ணை தேவையான அளவு வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப பண்டிகை காலங்களில் இரவு, பகலாக தங்களது குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் மண்பாண்டங்களை உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலமாகவும், ஒரு சில சமயங்களில் தாங்களே கிராமப்புற பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று விற்பனை செய்தும் வருகின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பொங்கல் பானை, குழம்பு சட்டி, மூடி, தட்டு, விறகு அடுப்பு போன்றவற்றை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தயாரிக்கப்பட்ட பொங்கல் பானைகளுக்கு சிவப்பு சாயம் பூசும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
நாகரிக வளர்ச்சி காரணமாக, ஒரு சிலர் பொங்கல் வைக்க வெண்கலம் மற்றும் சில்வர் பானைகளை பயன்படுத்தி வந்தாலும் கூட பெரும்பாலான வீடுகளில் பாரம்பரிய முறைப்படி மண் பானைகளையே பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் தற்சமயம் வெளிநாடுகளுக்கு கூட மண் பாண்டங்கள் ஏற்றுமதி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஆண்டாண்டு காலமாக, மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் கூட பொருளாதார ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியவில்லை. வியாபாரிகள் மூலமாகவே ஓரளவுக்கு பொங்கல் பானை, அடுப்பு உள்ளிட்டவை விற்பனை செய்து வருகிறோம்.
கஜா புயல்
மண்பாண்ட தயாரிப்பு தொழிலுக்கு மூலப்பொருட்களான களிமண், சூளைக்கு பயன்படுத்தும் தென்னை மட்டை, கோம்பை மட்டை ஆகியவை ஒரு காலத்தில் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. ஆனால் தற்போது அனைத்தும் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் கஜா புயல் சமயங்களில் தென்னை மட்டைகள் கூட கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வந்தோம்.
எனவே எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு உதவிகளை செய்தால் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.