நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்வதற்கான பணி- அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர்
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்வதற்கான பணியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்ய ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மரத்தை உளியால் செதுக்கி தொடங்கி வைத்தனர். இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பக்தர்கள் பங்களிப்புடன் புதிய வெள்ளித்தேர் ரூ.4 கோடி செலவில் செய்யப்பட்டு கடந்த வாரம் உலா வர செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.31.24 கோடி மதிப்பீட்டில் 51 புதிய மரத்தேர்கள் செய்வதற்கும், ரூ.4.12 கோடி மதிப்பீட்டில் 13 மரத்தேர்களை மராமத்து செய்வதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்ய ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் பணி உபயதாரர் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்துக்குள் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், இந்து அறநிலையத் துறை கமிஷனர் முரளீதரன், கூடுதல் ஆணையர் ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், உதவி கமிஷனர் சீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாலமன், துர்கா தேவி நடராஜன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், சுதா பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.