விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்


விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x

திண்டுக்கல் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். அதேபோல் பொதுமக்களும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது வழக்கம்.

ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

சிலைகள் தயாரிக்கும் பணி

மேலும் இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி பகுதியில் சிவசேனா சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. 1 அடி முதல் 9 அடி உயரம் வரை இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேப்பர் கூழ், கிழங்கு மாவு, தென்னை நார் மற்றும் இயற்கை நிறமிகள் மூலம் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. அன்ன விநாயகர், சிவலிங்க விநாயகர், தர்பார் விநாயகர், ராஜ அலங்கார விநாயகர், சங்கு விநாயகர், தங்க விநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலையின் உயரம், தரத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளதாக சிவசேனா நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story