கால்வாய், ஓடைகள் தூர்வாரும் பணி துரிதப்படுத்தப்படும்- மாநகராட்சி ஆணையாளர் பேட்டி
‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாய், ஓடைகளை தூர்வாரும் பணி துரிதப்படுத்தப்படும்’ என்று நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூறினார்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றிய சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நெல்லை மாநகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம் துணை ஆணையாளர் தாணுமூர்த்தி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தூர்வாரும் பணி
பின்னர் புதிய மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நிருபர்களிடம் கூறுகையில், 'வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள், ஓடைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் துரிதப்படுத்தப்படும். மாநகர பகுதியில் மழைநீரானது சாலைகளில் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பஸ்நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதைத்தொடர்ந்து அவரை உதவி ஆணையாளர்கள் காளிமுத்து, கிறிஸ்டி, சொர்ணலதா, மாநகர பொறியாளர் குமரேசன், செயற்பொறியாளர் வாசுதேவன், மாநகர் நல அலுவலர் சரோஜா மற்றும் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.