தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்


தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்
x

தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரை பெண்ணே மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி ராஜாத்தி (வயது 34). இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தன்னுடன் வேலை செய்த ஒருவர் மூலமாக கொருக்குபேட்டை கார்னேசன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த வக்கீல் தட்சிணாமூர்த்தி (34) என்பவர் அறிமுகம் ஆனார்.

அவர், ராஜாத்தியிடம் சென்னை தலைமை செயலகத்தில் துப்புரவு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார்.

இந்தநிலையில் தண்டையார்பேட்டை மெட்ரோ ெரயில் நிலையம் அருகே மேலும் 4 பெண்களிடம் தலைமைச் செயலகத்தில் துப்புரவு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் தட்சிணாமூர்த்தி பணம் வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ராஜாத்தி, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர், தட்சிணாமூர்த்தி தன்னிடமும் இதேபோல் கூறிபணம் வாங்கி மோசடி செய்ததை அந்த பெண்களிடம் கூறினார். பின்னர் தட்சிணாமூர்த்தியை மடக்கிப்பிடித்து தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

இது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தட்சிணாமூர்த்தி, தலைமை செயலகத்தில் துப்புரவு வேலை வாங்கி தருவதாக கூறி அந்த பெண்களிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்தது தெரிந்தது. தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர், இது போல் வேறு யாரிடமாவது அரசு வேலை வாங்கித் தருவதாக மோடி செய்துள்ளாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story