கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு 3 ஆட்டோ டிரைவர்கள் கைது
அருமனை அருகே கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்டு, தாக்க வந்த பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக 3 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அருமனை:
அருமனை அருகே கேலி-கிண்டல் செய்ததை தட்டி கேட்டு, தாக்க வந்த பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக 3 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கேலி-கிண்டல்
அருமனை அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார்.
மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் கேலி-கிண்டல் செய்வது வழக்கம். அதே போல் நேற்று மதியம் மேல்புறம் சந்திப்பில் நடந்து சென்ற அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர்கள் கேலி-கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டுக்கு சென்று கம்பு மற்றும் வெட்டுக்கத்தியை எடுத்து வந்து ஆட்டோ டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்
இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதை அந்த பகுதி வழியாக சென்ற வாலிபர்கள் பார்த்தனர். அவர்கள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அருமனை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதை பார்த்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.
3 பேர் கைது
அதன்பேரில் மேல்புறத்தை சேர்ந்த சசி (வயது 47), வினோத் (44), பாகோடு பகுதியைச் சேர்ந்த திபின், விஜயகாந்த் (37) அரவிந்த் ஆகிய 5 பேர் மீதும் பெண்ணை தடுத்து நிறுத்தியது, தகாத வார்த்தை பேசியது, அவமானப்படுத்தியது மற்றும் மிரட்டியதாக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
வடமாநிலத்தில் நடக்கும் சம்பவம் போல் மேல்புறத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.