தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

பழனி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய கோம்பைபட்டி பகுதியில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு கரும்பு, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோம்பைபட்டியில் உள்ள தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இவை அவ்வப்போது தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் தோட்டத்துக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தோட்ட பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில் கூறுகையில், கோம்பைபட்டி பகுதியில் இரவு நேரங்களில் தனியாகவும், கூட்டமாகவும் யானைகள் உலா வருகின்றன. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 6 பேர் கொண்ட சிறப்பு வனப்படையினர் இரவு முழுவதும் கோம்பைபட்டி பகுதியில் ரோந்து செல்கின்றனர். யானை நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்க விவசாயிகளிடம் தெரிவித்துள்ளோம். அதேபோல் இரவில் பெரும்பாலும் தோட்ட பகுதியில் தங்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.