கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு


கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்தார். சாவிலும் இணைபிரியா இந்த தம்பதியால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்தார். சாவிலும் இணைபிரியா இந்த தம்பதியால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

கணவர் இறந்தார்

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 88). இவரது மனைவி மருதாம்பாள் (83), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.

அதிர்ச்சியில் மனைவியும் சாவு

கணவர் இறந்த தகவல் அறிந்ததும் மருதாம்பாள் செய்வதறியாது திகைத்தார். இத்தனை ஆண்டுகளாக தன்னோடு பயணித்தவர் தன்னை விட்டு விட்டு போய்விட்டாரே. இனிமேல் தனக்கு யார் ஆதரவு? என்று மருதாம்பாள் மனம் வெதும்பினார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் இறுதி சடங்குகளுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது மருதாம்பாள் தனது கணவரின் அருகில் சென்று அவரது உடலை பார்த்தவாறு அமர்ந்து தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.

இரவு கிருஷ்ணமூர்த்தி உடல் அருகே அமர்ந்து அழுதுகொண்டே இருந்த மருதம்பாள் திடீரென கிருஷ்ணமூர்த்தி உடல் மீது மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் மருதாம்பாள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரை எழுப்ப முடியவில்லை. அப்போதுதான் அவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைக்கண்ட அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

இதனைத்தொடர்ந்து நேற்று மதியம் கணவன்-மனைவி இருவரது உடல்களையும் ஒரே வண்டியில் கொண்டு சென்று ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். திருமணம் ஆகி 50 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story