இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன
அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர், 5 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் முடிவுகள் வெளியிடுப்பட்டது.
போட்டியின்றி தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் ஜூலை 9-ந் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியம், கீழக்காவாட்டாங்குறிச்சி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தமிழ்ச்செல்வியும், செந்துறை ஒன்றியம், நாகல்குழி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஷ்ணு பிரியாவும், துளார் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ராமச்சந்திரனும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மலர்கொடியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.
ஓட்டுப்பதிவு
ஆனால் அரியலூர் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியம், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், தா.பழூர் ஒன்றியம், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9-ந் தேதி நடத்தப்பட்டது.
78.28 சதவீத வாக்குகள் பதிவானது
ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் இடைத்தேர்தலில் 81.69 சதவீத வாக்குகள் பதிவானது. மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டில் 72.28 சதவீத வாக்குகளும், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டில் 78.87 சதவீத வாக்குகளும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டில் 71.14 சதவீத வாக்குகளும் பதிவானது. சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டில் 74.70 சதவீத வாக்குகளும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டில் 79.28 சதவீத வாக்குகளும் பதிவானது. அரியலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 5 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தோ்தலில் மொத்தம் 79.28 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்கு எண்ணிக்கை
ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய 6 வாக்கு பெட்டிகள், அதற்கான வாக்கு எண்ணும் மையமான அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டி, அதற்கான வாக்கு எண்ணும் மையமான ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு, சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள், அதற்கான வாக்கு எண்ணும் மையமான ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு, தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தனி அறைகளில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்து. மேலும் வாக்கு பெட்டிகள் இருந்த 4 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
6 சுற்றுகளாக...
முன்னதாக காலை 8 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்திருந்த வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற வந்திருந்த அலுவலர்களை போலீசார் சோதனையிட்டு அடையாள அட்டை வைத்திருந்தவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். முதலில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீல் சரியாக காலை 8 மணி அளவில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் உடைத்தனர். அன்பிறகு வாக்குப்பெட்டிகள் வாக்குச்சீட்டு பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பெட்டிகளின் சீல்கள் உடைக்கப்பட்டு, வாக்குச்சீட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. ரெட்டிபாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகள் 6 சுற்றுகளாக எண்ணப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. ரெட்டிபாளையம கிராம ஊராட்சி தலைவர் பதவி இடைத்தேர்தலில் பாப்பாத்தி வெற்றி பெற்றார். இவருக்கு 75 வயது என்பது குறிப்பிடத்தக்கது. மேலணிக்குழி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் சிவசண்முகமும், இடையக்குறிச்சி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் தமிழ்மலரும், சிலம்பூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் சகுந்தலாவும், சாத்தம்பாடி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் சீத்தாராணியும், தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் மாரியம்மாளும் வெற்றி பெற்றனர்.
நாளை மறுநாள் பதவி ஏற்பு
இதையடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேர்தல் நடத்திய அலுவலர்கள் சான்றிதழ் வழங்கினர். வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே, வெற்றி பெற்றவர்களுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.