சுடுகாட்டில் நின்று கிராம மக்கள் போராட்டம்
சுடுகாட்டில் நின்று கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சாலை துண்டிப்பு
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, பசுமாத்தூர் பஞ்சாயத்து, கரத்தம்பட்டு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பாலாற்றில், மணல் அள்ள அனுமதி இல்லை. ஆனாலும், விதிமுறைக்கு மீறி சுமார் 15 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது.
ஆற்றுநீர் பாசனத்திற்காக செல்லும் ஏரிவரத்துக் கால்வாய், ஆற்றுவெள்ளம் செல்லமுடியாதபடி உயர்ந்துவிட்டது. இரவும் பகலும் மணல் அள்ள வாகனங்கள் வருவதால் வாகனங்களின் சத்தத்தால் தூக்கம் கெடுகிறது. இங்கு சுடுகாட்டுக்காக அரசு அமைத்துள்ள சிமெண்டு சாலையின் இரு புறங்களிலும் மணல் சுரண்டியதில், சாலை துண்டிக்கப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது.
சுடுகாட்டில் நின்று போராட்டம்
இதனால், இறந்தவர்களை ஆற்று மணலில் சுமந்து செல்ல முடியவில்லை. மணல் அள்ளிய பகுதிகள் பள்ளமாக மாறியுள்ளது. இறுதி ஊர்வலத்தின் போது இந்த வழியாக செல்பவர்கள் கால் இடறி கீழே விழுந்து எழுந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள குடிநீர் கிணற்றை சுற்றிலும்கூட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது.
இதை தட்டிக்கேட்ட பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் சுடுகாட்டுப் பாதை அமைக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். வண்டல் மண், மணலை குவித்து வைத்து, சுடுகாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தைக்கூட ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், சுடுகாட்டில் பிணத்தை புதைக்க போதிய இடம் இல்லை என்று கூறி கிராம மக்கள் சுடுகாட்டில் நின்று போராட்டம் நடத்தினர்.