அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலகு குத்தி, காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர்

கரூர்

மாரியம்மன் கோவில் திருவிழா

கரூர் மாநகரில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் அம்மனாக இருப்பதால், பல்வேறு இடங்களில் இருந்தும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா காலங்களில் பக்தர்கள் படையெடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனிதநீர் எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

கடந்த 13-ந் தேதி பூச்சொரிதல் விழாவையொட்டி, கரூர் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் 47 பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நிகழ்ச்சியில் தேரில் வீற்றிருந்தபடியே முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மேலும் நேற்று முன்தினம் முதல் இன்று வரை திருவிழாவின் முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. விரதம் இருந்து வரும் பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்திக்கொண்டு வந்து பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அலகு குத்தி நேர்த்திக்கடன்

அந்த வகையில் நேற்று காலை முதலே கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் ஜவகர்பஜார் வீதியில் மக்கள் அலைகடலென திரண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீராடி பக்தர்கள் நீண்ட அலகினை தங்களது கன்னத்தில் குத்திக்கொண்டு பக்தி பரவசத்துடன் வந்து கோவில் முன்பு சாமி வந்து ஆடினர். இன்னும் சிலர் தங்களது முதுகில் வாள்களை குத்திக்கொண்டும், கன்னத்தில் அலகு குத்தி கொண்டும் வந்தனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக மேள, தாளங்கள் முழங்கப்பட்டன.

பறவை காவடி

இதற்கிடையே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிலிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் பறவை காவடி தயார் செய்யப்பட்டது. பின்னர் அமராவதி ஆற்றில், தற்காலிகமாக வைக்கப்பட்ட குழாய் தண்ணீரில் புனித நீராடிய பக்தர்கள், தங்களது உடலில் இரும்பு கொக்கியை மாட்டிக்கொண்டனர். பின்னர் பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடியே பறவை காவடி எடுத்து வந்தனர். அப்போது வழிநெடுகிலும் நின்றிருந்தவர்கள் பறவை காவடியை வணங்கினர். பின்னர் கோவிலை வந்தடைந்ததும் பொக்லைன் எந்திரத்தில் தொங்கிய பக்தர்களை கீழே இறக்கி நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். இதேபோல் நாக்கில் வேல் குத்தி கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

இதையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர். பக்தர்கள் கூட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த கரூர் புறக்காவல்நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணினி திரையில் அதன் பதிவுகளை கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் முன்புறத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து, பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.


Next Story