லாரி கவிழ்ந்து சாலையில் ஓடிய ஆசிட்
வேலூர் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் ஆசிட் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் ஆசிட் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). லாரி டிரைவர். இவர் அங்குள்ள ஒரு கெமிக்கல் கம்பெனியிலிருந்து 32 பேரல்களில் ஆசிட் திரவத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றார்.
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் சாலையில் மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நேற்று அதிகாலை 2 மணி அளவில் லாரி வந்ததும் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மணல் மேட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது லாரி ஒரு பக்கமாக சாய்ந்தது. அதில் இருந்த பேரல்கள் அனைத்தும் சாலையில் விழுந்து உருண்டோடின. அப்போது சில பேரல்கள் உடைந்து அதில் இருந்த ஆசிட் கொட்டி சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக மாறியது. மேலும் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகத்தில் துணியை சுற்றி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
போலீஸ் விசாரணை
பின்னர் கிரேன் உதவியுடன் உடையாத பேரல்கள் அப்புறப்படுத்தப்பட்டு மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.