பேனா நினைவு சின்னம் வழக்கை ஒத்திவைத்தது தீர்ப்பாயம்


பேனா நினைவு சின்னம் வழக்கை ஒத்திவைத்தது தீர்ப்பாயம்
x

கோப்புப்படம்

பேனா நினைவு சின்னம் வழக்கு தொடர்பான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைய இருக்கிறது. இதற்கு பொதுமக்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து அனுமதி வழங்கிவிட்டது. இதன் அடுத்தகட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக பேனா நினைவு சின்னம் திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்து உள்ளது.

இந்த சூழலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் மனுவுக்கு பதிலளிக்க மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்வேறு துறைகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பொதுப்பணித்துறை சார்பாக மட்டுமே பதில்மனு தாக்கல் செய்துள்ளநிலையில், மத்திய மாநில அரசுகள் உள்ளிட்ட பிற துறைகள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கின் விசாரணையை மே 23ஆம் தேதிக்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


Next Story