தாறுமாறாக ஓடி மின்கம்பம் மீது மோதிய டிராக்டர் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள்கள் மீது ஏறி மின்கம்பம் மோதியது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 65). விவசாயி. இவருக்கு திருத்தணி அடுத்த கீச்சலம் கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்வதற்காக தனக்கு சொந்தமான டிராக்டரை காஞ்சீபுரத்தில் இருந்து கீச்சலம் கிராமத்திற்கு நேற்று ஓட்டிக் கொண்டு சென்றார்.
திருத்தணி மேல்ரோடு தணிகாசலம்மன் கோவில் அருகே உள்ள வேகத்தடை மீது டிராக்டர் ஏறிய போது, எதிர்பாராத விதமாக முன்னே சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் மீது உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள் மீது ஏரி மின்கம்பம் மீது மோதி நின்றது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
விபத்து நடந்தபோது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து பெஞ்சமின் விசாரித்து வருகின்றனர். டிராக்டர் மோதியதில் உடைந்த மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
மற்றொரு சம்பவம்
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அத்துல் (26) லாரி டிரைவர். இவர் மத்திய பிரதேசத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். நேற்று காலை சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வரும்போது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் முன்னால் சென்ற லாரியின் பின்னால் மோதினார். இந்த விபத்தில் அத்துல் ஓட்டிவந்த லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதனால் லாரியை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.