அட்டகாசம் செய்த புலி, கூண்டில் சிக்கியது
தமிழக-கேரள எல்லையில் கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த பெண் புலி கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்
தமிழக-கேரள எல்லையில் கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த பெண் புலி கூண்டில் சிக்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
கால்நடைகளை கொன்றது
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளை ஒட்டி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் உள்ளது. இந்தநிலையில் சுல்தான்பத்தேரி தாலுகா நூல்புழா பேரூராட்சிக்கு உட்பட்ட மூலங்காவு கொரலாட்டுகுன்னு பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வந்தது.
இதனால் தமிழக-கேரள எல்லையோர சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து சுல்தான்பத்தேரி வனத்துறை சார்பில், 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. மேலும் அதன் உள்ளே இறைச்சி துண்டுகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண் புலி சிக்கியது
இந்தநிலையில் நேற்று அதிகாலை 13 வயது பெண் புலி ஒன்று கூண்டில் சிக்கியது. இதை கண்ட வன ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் முத்தங்கா சரணாலய அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து கூண்டில் சிக்கிய புலியின் உடல்நிலையை பரிசோதித்தனர்.
பின்னர் சுல்தான்பத்தேரி அருகே உள்ள குப்பாடி வனவிலங்கு காப்பகத்துக்கு பெண் புலி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறும்போது, பெண் புலி ஊருக்குள் புகுந்து வேட்டையாடியதால், அதன் உடல் நிலையில் பாதிப்பு உள்ளதா என மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனிடையே மாநில எல்லையில் புலியை பிடித்ததால் எல்லையோர மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.