மின்ஊழியரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு


மின்ஊழியரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 7 Aug 2023 12:30 AM IST (Updated: 7 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் மின்ஊழியரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பரணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் ஆலங்குளம் பகுதியில் சொந்தமாக இடம் ஒன்று வாங்குவதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைப்பதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளத்திற்கு வந்தார்.

அங்கு உள்ள தனியார் வங்கி ஒன்றில் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சம் பணத்தை தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு ஆலங்குளம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரின் வீட்டிற்கு அவருடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story