கோவில் பூசாரி அடித்துக் கொலை


தினத்தந்தி 25 Oct 2023 1:15 AM IST (Updated: 25 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் மாரிமுத்து (வயது 44). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக அவர் தனது மனைவியிடம் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூஜைக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.


ஆனால் இரவு 10 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தார் அவரைத் தேடிப்பார்த்துள்ளனர். மேலும் அவரது செல்போன் எண்ணை அழைத்தபோது, அது சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் உள்ள படிக்கட்டில் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள், இதுபற்றி உடனடியாக கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இறந்துகிடந்தவர் பூசாரி மாரிமுத்து என்பது தெரியவந்தது.


பிணமாக கிடந்த மாரிமுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், குன்னூர் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் குமரேசன், ஜெய்சன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், மாரிமுத்து இறந்து கிடந்த இடத்தில் இருந்து கோத்தகிரி பஸ் நிலையம் வரை சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. எனவே கொலையாளிகள் பஸ்சில் தப்பிச் சென்று இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் பூசாரி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே உள்ள 3 வீடுகள் பூட்டியிருந்தன. 2 வீட்டில் குடியிருப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


ஆனால் தனியாக பெண் ஒருவர் இருந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு பூசாரி மாரிமுத்து அடிக்கடி வந்து செல்வதும், அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. எனவே அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை அந்தப் பெண் கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்துத் தேடத் தொடங்கினர்.

அப்போது அந்தப் பெண் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவருடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்தப் பெண் மற்றும் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் கோத்தகிரி சிவா காட்டேஜ் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் தனலட்சுமி (25) என்பதும், அவருடன் நின்றவர் உதயகுமார் (37) என்பதும், கோவில் பூசாரி மாரிமுத்துவை அடித்துக் கொலை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


கைதான தனலட்சுமி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:- எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது, கணவர் முரளி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து குழந்தைகளை தனது தந்தையிடம் விட்டுவிட்டு, கோவில் மேடு பகுதியில் தனியாக வசித்து வந்தேன். அப்போது எனக்கும், அதேப்பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். இதனால் தனக்கு தற்போது 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.

மேலும், கோவில் பூசாரி மாரிமுத்து, மட்டுமின்றி கோத்தகிரி பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த உதயகுமார் (37) என்பவருடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் பூஜைக்கு செல்வதாக கூறி விட்டு பூசாரி மாரிமுத்து தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது இரவு சுமார் 10 மணிக்கு உதயகுமாரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனலட்சுமி, மாரிமுத்துவுடன் இருப்பதைக் பார்த்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனலட்சுமி மற்றும் உதயகுமார் இருவரும் சேர்ந்து மாரிமுத்துவை பலமாக அடித்து தாக்கி உள்ளார்கள். இதில் நிலைகுழைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும், பக்கத்து வீடுகளில் ஆட்கள் இல்லாததால், அவரின் உடலை வீட்டின் வெளியே போட்டு வைத்து உள்ளார்கள்.

பின்னர் காலை 6 மணிக்கு எதுவும் நடக்காதது போல் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர். மேட்டுப்பாளையத்தில் நின்று கொண்டிருந்தபோது, போலீசார் தங்களை கைது செய்து விட்டனர். இ்வ்வாறு தனலட்சுமி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கோவில் பூசாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story