ரெயில் பெட்டியின் கழிவறைக்குள் பூட்டியபடி பயணம் செய்த வாலிபர்
ரெயில் பெட்டியின் கழிவறைக்குள் அமர்ந்து கதவை பூட்டிக்கொண்டு பயணம் செய்த வாலிபரை, கதவை உடைத்து போலீசார் மீட்டனர்.
பூட்டியே இருந்த கழிவறை
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 20-ந் தேதி காலை புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-2 பெட்டியின் கழிவறை ரெயில் புறப்பட்டதில் இருந்து பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. ஆனால் கழிவறையின் உள்ளே ஆள் இருக்கும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது.
இதற்கிடையே ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை கடந்து அரக்கோணம் வந்து கொண்டிருந்த போது மீண்டும் கழிவறையில் இருந்து சத்தம் வந்ததால் பயணிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர்.
கதவை உடைத்து மீட்பு
இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இந்தநிலையில் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சென்று அந்த கழிவறை கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அதில் வாலிபர் ஒருவர் இருந்தார்.
அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சோகன் தாஸ் என்று கூறினார். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று முன்னுக்கு பின் முரணாக பேசியதால் முழுமையான விவரம் தெரியவில்லை. அவரை பாதுகாப்புப் படை போலீசார் அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், எதற்காக ரெயில் பெட்டியில் ஏறினார் என்ற விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.