போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த வாலிபர்
காதல் மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு வந்தபோது களக்காடு போலீஸ் நிலையத்தில் வாலிபர் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
களக்காடு:
காதல் மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு வந்தபோது களக்காடு போலீஸ் நிலையத்தில் வாலிபர் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
காதல் திருமணம் செய்தவர்
சென்னை அம்பத்தூர் பாடியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ரூப்பேஷ் (வயது 36), கொத்தனார்.
இவரும், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூங்கிலடி வடக்கு தெருவை சேர்ந்த இளவரசி (33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் ரூப்பேஷ், மனைவி இளவரசியுடன் மூங்கிலடியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
மனைவி மீது சந்தேகம்
இந்தநிலையில் ரூப்பேஷ் மனைவி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரை அவதூறாக பேசி வந்துள்ளார். கடந்த 5-ந்் தேதி அவர் மனைவி இளவரசியின் மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கினார். இதுகுறித்து இளவரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். இதுபற்றி விசாரணை நடத்த ரூப்பேஷை போலீசார் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து இருந்தனர்.
விஷம் குடித்தார்
அதன்படி நேற்று முன்தினம் ரூப்பேஷ், அவரது மனைவி இளவரசி ஆகியோர் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றனர். அப்போது போலீசார் வேறு வழக்கு தொடர்பாக விசாரித்து கொண்டிருந்தனர். இதனால் கணவனும், மனைவியும் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து இருந்தனர்.
அப்போது ரூப்பேஷ் தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை (விஷத்தை) எடுத்து குடித்து விட்டார். இதனால் அவர் மயங்கினார். இதை பார்த்த மனைவி இளவரசி அதிர்ச்சி அடைந்து சத்தம் ேபாட்டார்.
தீவிர சிகிச்சை
இதை அறிந்ததும் போலீசார், ரூப்பேஷை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாலிபர் ரூப்பேஷ் ஏற்கனவே 3 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பரபரப்பு
இதுகுறித்து இளவரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணைக்கு வந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.