வாலிபர் சரமாரி குத்திக்கொலை
திசையன்விளையில் வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளையில் வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். செருப்பு தைக்கும் தொழிலாளி. இவருடைய மகன் முத்தையா (வயது 19).
இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கத்திக்குத்து காயங்களுடன்...
நேற்று முன்தினம் இரவில் முத்தையா தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. எனவே, அவரை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் முத்தையா உடலில் சரமாரி கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெவள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கொலையாளிகள் குறித்து துப்பு துலக்குவதற்காக போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, சிறிது தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பெண் விவகாரமா?
இறந்த முத்தையாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முத்தையாவை கொலை செய்தது யார்?, அவரை எதற்காக கொலை செய்தனர்? பெண் விவகாரத்தில் முத்தையா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதுதொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இதற்கிடையே, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் முத்தையாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திரண்டனர். தொடர்ந்து திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முருகன், ஆதி தமிழர் பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் இளமாறன் கோபால், ஆதி தமிழர் கட்சி நிர்வாகி இளையராஜா ஆகியோர் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உறவினர்கள் மனு கொடுக்க சென்றனர்.
50 பேர் கைது
அப்போது முத்தையா சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். இதில் உரிய நீதி கிடைக்க வேண்டும். முத்தையா குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் முத்தையாவின் உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் மனு வழங்கினர்.
திசையன்விளையில் வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.