வாலிபருக்கு கத்திக்குத்து


வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு கத்திக்குத்து

கோயம்புத்தூர்

பீளமேடு

கோவையில் ஆள் மாறாட்டத்தில் வாலிபரை கத்தியால் குத்திய கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

செல்லப்பிராணி விற்பனை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 23). இவர் சிங்காநல்லூரில் தங்கி இருந்து செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த 13-ந் தேதி தனது நண்பருடன் ஸ்கூட்டியில் விளாங்குறிச்சி ரோடு எல்லைத்தோட்டம் மேம்பாலம் வழியாக தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் ஒன்று துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்மணி மற்றும் அவரது நண்பர் ஞானசிவம் ஆகியோர் ஸ்கூட்டியில் அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் எதிர்பாரத விதமாக தடுமாறி கீழே விழுந்தனர்.

கத்திக்குத்து

உடனே அந்த கும்பல் கீழே விழுந்த தமிழ்மணியை கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த தமிழ்மணியை, அவரது நண்பர் ஞானசிவம் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது அவர்கள் ஸ்கூட்டியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதால் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தமிழ்மணி உடலில் கத்திக்குத்து காயம் இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் பீளமேடு போலீசார் விரைந்து வந்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ஒருகும்பல் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆள்மாறாட்டம்

போலீஸ் விசாரணையில் தமிழ்மணியை கத்தியால் குத்தியது பீளமேடு பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (வயது 24), தண்ணீர் பந்தலை சேர்ந்த ஜெயராஜ் (24), கே.ஆர்.சங்கர், வினோத், ரஞ்சித், கங்கா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் ஜெயராஜ் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது தெரியவந்தது. வீரபத்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கே.ஆர்.சங்கர், வினோத், ரஞ்சித், கங்கா ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் 4 பேரும் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள ஒரு பாரில் மது குடிக்க சென்றனர். அப்போது அங்கு மது குடித்து கொண்டிருந்த 2 பேருக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் அந்த கும்பல், அவர்கள் இருவரும் பாரை விட்டு வெளியே வரும்போது தாக்க திட்டமிட்டனர். ஆனால் ஆள்மாறி அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த தமிழ்மணி, ஞானசிவத்தை தாக்கியது தெரியவந்தது.


Next Story