மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி; அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு


மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி;  அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

சூதாட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை விடுவிக்க கோரி அரகண்டநல்லூா் போலீஸ் நிலையத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் நிலையத்தின் பின்பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததாக திருவெண்ணெய்நல்லூர்அடுத்த அம்மாவாசை பாளையத்தை சேர்ந்த மொட்டையன் மகன் புண்ணியமூர்த்தி (வயது 42), திருக்கோவிலூர் ஏரிக்கரை மேட்டுப்பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் கோபால் (44), எல்ராம்பட்டை சேர்ந்த ராமர் மகன் சுரேஷ் (37), அரகண்டநல்லூரை சேர்ந்த செல்வம் என்கிற செப்ட்டிக் செல்வம், தேரை விஜயகுமார் மற்றும் அய்யாசாமி மகன் மாயக்கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.37ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்த சுரேஷ் என்பவர் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை விடுவிக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் போலீசாரை கண்டித்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை காப்பாற்றினா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story