நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று விருதுநகரில் நேற்று நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று விருதுநகரில் நேற்று நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. முப்பெரும் விழா
விருதுநகரில் நேற்று தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. இதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
விழாவில் சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு கலைஞர் விருதும், புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், விருதுநகர் மாவட்டம் குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டியதுடன், கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பணமுடிப்புகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த மாநாட்டிற்கு நான் வரும் போது 2 பக்கமும் பட்டொளி வீசி பறந்து கொண்டு இருக்கிற தி.மு.க. கொடியை நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு வந்தேன். என்னை வருக, வருக என பட்டொளி வீசி வரவேற்றது.
இந்த மேடையில் டி.ஆர்.பாலு, சங்கரலிங்க நாடாரை நினைவுப்படுத்தினார். அவரின் கோரிக்கையை ஏற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதை நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். அண்ணா, 'தமிழ்நாடு' என்று மூன்று முறை உரக்க குரல் எழுப்பியபோது, அப்போது சட்டசபையில் இருந்தவர்கள் 'வாழ்க...வாழ்க...' என்று குரல் எழுப்பியது உச்சம்.
இப்படி பெருமை வாய்ந்த ஜூலை 18-ம் நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படிப்பட்ட பேரியக்கமான தி.மு.க., இந்த மண்ணில் முப்பெரும் விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டை எல்லா வளமும், நலமும் கொண்ட மாநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
மதுரையில் இன்று (அதாவது நேற்று) காலையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
5 விருதுகள்
பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோன்றியநாள் ஆகிய 3 நினைவுகள்தான் முப்பெரும் விழா.
திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதிதான் திருநாள். நம்மை நாமே புதுப்பித்துகொள்ளும் நாள். உணர்ச்சியும், எழுச்சியும் தரக்கூடிய நாள். அந்த நாளில் தொண்டர்களை வரவழைத்து விழாக்கள் காணுவதை வழக்கமாக வைத்திருந்தார், தலைவர் கருணாநிதி.
அவருடைய வழியில் நாம் விருதுநகர் மண்ணில் விழாக்கோலம் பூண்டு இருக்கிறோம். தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் ஆகிய 5 பேர்் தி.மு.க.வின் முகவரியாகவும், முகமாகவும் விளங்குபவர்கள். இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தத்துவத்தின் அடையாளம். இவர்களின் கொள்கை நம்மை வழிநடத்தி வருகிறது. தகுதி வாய்ந்த அந்த 5 பேரின் பெயரில் தற்ேபாது விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.
அரசியல் களத்தை ஈர்த்தது
கருணாநிதி ஒரே ஒரு கடிதம் எழுதி லட்சக்கணக்கானவர்களை மாநாட்டுக்கு வரவழைத்து விடுவார். ஒரு சில கடிதங்களை எழுதி ஜனநாயக ஆட்சியை அமைத்து விடுவார். ஒருசில கடிதங்களை எழுதி சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விடுவார்.
இதே போல் தலைவர் கருணாநிதி எழுதிய கடிதங்கள் 54 தொகுதிகளாக 4041 பக்கங்களாக வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் நான் எழுதிய திராவிட மாடல் நூலும் வெளியிடப்பட்டது. பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட, கலைஞர் விருது பெற்ற பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றிருக்கிறார். தி.மு.க. ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. ஒரு இனத்தின் ஆட்சி என்று நான் கூறினேன். இந்த ஆட்சியை திராவிட மாடல் என்று அன்று நான் பெயர் சூட்டிய போது பலரும் வியந்தார்கள். அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி என்பது போல் நான் ஸ்டாலின் ஆட்சி என்று கூறவில்லை. திராவிடம் என்று நான் கூறியபோது நாடு முழுவதும் அரசியல் களத்தை ஈர்த்தது.
ஆரிய மாடல் எது?
திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள். உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பேசுவதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.
எல்லோருக்கும் வேலை கொடு, எல்லோருக்கும் அதிகாரத்தை கொடு, ஆணும், பெண்ணும் சமம் என்பதுதான் திராவிட மாடல். சமூகநீதி, சமத்துவம், சமஉரிமை, சகோதரத்துவம் என்பதுதான் திராவிட மாடல். அனைத்து துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதுதான் இந்த ஆட்சிக்கு நான் விதித்த எல்லை.
இதுகுறித்து நான் பல விழாக்களில், கூட்டங்களில் பேசிய உரைகளில் ஒரு பகுதியை தொகுப்பாக வெளியிட்டுள்ளோம். இந்த புத்தகம் சிறிய டைரி வடிவில் வெளியிடப்பட்டு உள்ளது. என்னை நம்பி கருணாநிதி கட்சியை ஒப்படைத்து இருக்கிறார்.
செயல்படுத்தும் வலிமை
அந்த நம்பிக்கையை காத்து வருகிறேன். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தமட்டில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்ற குறியீடு நிர்ணயித்துள்ள நிலையில் தமிழகத்தில் 281 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார்.
தேசிய அளவிலான தனிநபர் சராசரி வருமானத்தைவிட தமிழகத்தில் தனிநபர் சராசரி வருமானம் அதிகம். பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன.. இப்படி தமிழகத்தின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இது தான் திராவிட மாடல் ஆட்சி. எனக்கு இருக்கும் ஆசை எல்லாம் தமிழகம் அனைத்து வகையிலும் முதலிடம் பெற வேண்டும் என்பது தான். அதனை செயல்படுத்தக்கூடிய வலிமையை அண்ணாவும், கருணாநிதியும் நமக்கு தந்துள்ளனர்.
தொண்டர்களை நம்பி
அந்த கடமை என்னுடைய தோளில் சுமத்தப்பட்டுள்ளது. நான் தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன். கட்சி, ஆட்சி இரண்டையும் ஒரு சேர காத்து வருகிறேன். தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. உங்களில் தலைமை தொண்டனாக இருந்து நான் நிர்வகித்து வருகிறேன். கட்சி இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது. நான் கருணாநிதியின் லட்சோப, லட்ச தொண்டர்களை நம்பிதான் கட்சியையும், ஆட்சியையும் நிர்வகித்து வருகிறேன்.
1967-ல் ஆட்சிக்கு வந்த போது அண்ணா நான் மகிழ்ச்சி அடையவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கட்சியை விட்டு விடக்கூடாது என குறிப்பிட்டதாக கருணாநிதி கூறி உள்ளார். அதை தான் நான் கட்சி நிர்வாகிகளிடமும், அமைச்சர்களையும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும் தெரிவிக்க விரும்புகிறேன்.
நிதி உரிமை பறிப்பு
மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஒரு ராணுவவீரருக்கு வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும் என்ற 2 கடமைகள் உள்ளது. அதுபோல மாநிலத்தில் திராவிட மாடல் ஆட்சி, நாடு முழுவதும் கூட்டாட்சி.
நாம் வலிமையான மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது. இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களும் நம்மை கவனிக்க வேண்டும். நாம் வலிமையாக இருப்பதால் தான் மக்களுக்கு இந்தளவுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால் இந்த அளவுக்கு நன்மைகளை செய்ய முடியாது. ஜி.எஸ்.டி. மூலம் மாநில நிதி உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. நீட் கல்வி கொள்கையால் நம் உரிமை மறுக்கப்படுகிறது.
40 தொகுதிகளிலும் வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் நம் கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் நம் உரிமைகளை காக்கமுடியும். அதற்கு இப்போதே களப்பணி ஆற்ற வேண்டும். கடந்த 2004-ல் கருணாநிதி முழங்கினார். 2019-ல் உங்கள் தொகுதியில் நான் என்று நான் முழக்கமிட்டேன்.
தற்போது இந்த முப்பெரும் விழா மூலம், வருகி்ன்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெறுவோம் என முழக்கமிடுகிறோம். அதை அடைய நீங்கள்அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெள்ளி செங்கோல்
நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கட்சிப்பணியில் நற்சான்றிதழ் பெற்றவர்களின் பணிகளை டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கி பேசினார். விருது பெற்றவர்களின் சாதனைகள் பற்றி துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செல்வராஜ் ஆகியோர் பேசினர். முதன்மை செயலாளர் கே.என்.நேரு விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.
இதனை தொடர்ந்து கருணாநிதியின் கடிதங்கள் தொகுப்பு 54 புத்தகங்களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 148 பக்கங்கள் கொண்ட முதல்-அமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியினை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொகுத்து வழங்கினார்.
விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன. நிறைவில், அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார்.
கனிமொழி எம்.பி.
விழாவில் கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு மாவட்டங்களின் தி.மு.க. நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.