நடப்பு கல்வியாண்டில் ரூ.120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு


நடப்பு கல்வியாண்டில் ரூ.120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு
x

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ரூ. 120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ரூ. 120 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.

கல்விக்கடன்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நிதி ஆண்டுகளில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 4,800 மாணவர்களுக்கு ரூ.106 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ரூ.120 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்திருவிழா

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் கல்வித்திருவிழா நடத்தி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவும், கல்விக்கடன் தொடர்பாக மாணவர்களுக்கான விளக்கங்களை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 46 ஆயிரம் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே வேலையின்மையின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகரசபை மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story