தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை சி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு
கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
சிதம்பரம்,
காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. இந்த கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் அருகே கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்ட பட்டினம், அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் ஆகிய 4 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திட்டுக்காட்டூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், புவனகிரி அருண்மொழித்தேவன் ஆகியோர் தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த உதவியும் செய்யவில்லை
வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் 2¼ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட வெள்ளம் அதிகரித்துள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நிர்வாகம் செயல்படவில்லை. தி.மு.க. அமைச்சர்கள் யாரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.தற்போது மழைக்காலம் வருகிறது. அதற்குள் வல்லம்படுகை கொள்ளிடம் பகுதியில் நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், அருள், சிவசுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.