முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. புதிய மசோதா தாக்கல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை,
தமிழக சட்டசபை வருகிற 17-ந் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. அந்த மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது. அதன்பின்னர் அந்த சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும்.