திருவாரூரில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது

திருவாரூரில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது
திருவாரூரில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலம்
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்த நாட்கள் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்கவே இல்லை. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
மேலும் குளிர்பான கடைகள், பழக்கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் அனல் காற்றால் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதியடைந்து வந்தனர். இரவில் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் மக்கள் தவித்தனர்.
தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கோடை மழையால் வெப்பம் தணிந்தது
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்தது. திருவாரூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. மதியம் 96 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. திடீரென மதியம் 12.45 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. அதை தொடர்ந்து பெய்த மழை 1 மணி நேரம் வரை நீடித்தது. இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த மழையால் திருவாரூர் கீழ வீதி மற்றும் தெற்கு வீதி பகுதியில் தண்ணீர் செல்ல வழியின்றி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இதேபோல் துர்காலயா சாலை, விளமல் கூட்டுறவு நகர், தியானபுரம் செல்லும் பகுதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இந்த மழையின் காரணமாக கோடை நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை மற்றும் பெருமாள் கோவில் நத்தம், மேலநத்தம், வல்லூர், கோவிந்தநத்தம், பாளையகோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், நத்தம் ஆகிய பகுதிகளில் திடீரென நேற்று மதியம் கனமழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நன்னிலம்
நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று திடீரென மதியம் 12 மணி அளவில் சூறாவளி காற்றுடன் கங்களாஞ்சேரி, சுரக்குடி, மூங்கில்குடி, காக்காகோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
====
தென்னை மரத்தை மின்னல் தாக்கியது(பாக்ஸ்)
திருவாரூரில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூரில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி தெற்கு வீதி ஆகும். அந்த பகுதியில் ஏராளமான கடைகள், நிறுவனங்கள் உள்ளன. நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தபோது தெற்கு வீதியில் உள்ள ஒரு தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கிய நேரத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.