இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் - கே.எஸ்.அழகிரி


இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் - கே.எஸ்.அழகிரி
x

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பா.ஜ.க. ஆட்சியில் ஜனவரி 2018-ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை திரட்டுவதை பா.ஜ.க., ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, குஜராத் மாநிலத்திற்காக தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடை ரூ.174 கோடி. இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் ரூ.163 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்ற காரணத்தால் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பண பலத்தோடு, அதிகார பலமும் சேர்ந்து சுயேச்சையாக, நியாயமாக தேர்தல் நடைபெற முடியாத சூழலை பா.ஜ.க. உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய அநீதிகளை எதிர்த்து தான் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் பொதுமக்களைத் திரட்டி பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகப் பரப்புரையின் மூலம் ஆதரவைத் திரட்டி வருகிறார். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியின் மூலமே மோடியின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்படும் என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story