ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
வழக்கு விசாரணை
ராஜாக்கமங்கலத்தை அடுத்த எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், கொத்தனார். இவர் அனந்தநாடார்குடி பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே புத்தளம் பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். தமிழ்செல்வன், அய்யாவு குடும்பத்துக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு நடந்தது.
அதைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் மனைவி ஜாக்குலின் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்லால், தனிப்பிரிவு ஏட்டு சுதாகரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு வழக்கு விசாரணைக்கு சென்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
அப்போது அங்கு அய்யாவு (வயது 55), அவருடைய மனைவி கலா (54), மகன் பார்த்தசாரதி (24), மகள்கள் சரண்யா (32), சங்கீதா (29) ஆகியோர் இருந்தனர். விசாரணை நடத்திய போலீசார் பார்த்தசாரதியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அய்யாவு உள்பட 5 பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்லால், ஏட்டு சுதாகரன் ஆகியோரை அவர்கள் தாக்கினார்கள். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்படியும் விடாமல் அய்யாவு அரிவாளை எடுத்துக்கொண்டு போலீசாரை ெவட்ட வந்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்லால், ஏட்டு சுதாகரன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விரைந்து வந்து, இருவரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே தந்தை-மகன் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
3 பெண்கள் கைது
இதனைத்தொடர்ந்து விடிய, விடிய அந்த வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம் லால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலா, சரண்யா, சங்கீதா ஆகிய 3 பேரையும் நேற்று காலையில் கைது செய்தனர். தப்பி ஓடிய தந்தை, மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.