வாகன சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு-அரிவாளால் வெட்டவும் முயன்ற வாலிபர் கைது


வாகன சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு-அரிவாளால் வெட்டவும் முயன்ற வாலிபர் கைது
x

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரில் வந்த வாலிபர்

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையில் போலீசார் மாடக்குளம் மெயின் ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். காரில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி என்ற மணிகண்டன் (வயது 25) இறங்கினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து அந்த காரை சோதனை செய்ய கூறினார்.

ஏற்கனவே தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் அழகுமுத்து பணிபுரிந்த போது, மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் பதிந்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் வாகன சோதனையின்போது, தனது காரை சோதனை செய்ய முயன்றதால் மணிகண்டன் ஆத்திரம் அடைந்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயன்றார். அவர் சுதாரித்து கொண்டு விலகியதால் அவர் மீது அரிவாள் வெட்டு விழவில்லை. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் உடனே மணிகண்டனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசார் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதில் ஒன்று வெடிக்க, மற்றொன்று அருகில் உள்ள புதரில் போய் விழுந்தது. ஆனால் அது வெடிக்கவில்லை.

மேலும் மணிகண்டன் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடினார். தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மணிகண்டன் தப்பி சென்ற பகுதி வழியாக அவரை தேடிச்சென்றனர்.

கைது

அப்போது எஸ்.எஸ்.காலனி புதுவாழ்வு நகர் பகுதியில் மணிகண்டன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து ஆகியோர் அவரை கைது செய்தனர். மேலும் அவர் வந்த கார் மற்றும் அதிலிருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story