மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பலி
பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பரமத்திவேலூர்
9-ம் வகுப்பு மாணவன்
பரமத்திவேலூர் தாலுகா, கீழ்சாத்தம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் மித்திரன் (வயது 15). இவன் கோனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் மித்திரனும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசு என்பவரது மகன் பிரசாந்த் (30) என்பவரும் பெட்ரோல் வாங்குவதற்காக பரமத்தி அருகே கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே காரைக்கால் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மோமட்டார் சைக்கிளில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பின்னர் கீழ்சாத்தம்பூர் செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி ஒன்று மித்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மித்திரன், பின்னால் அமர்ந்து சென்ற பிரசாந்த் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சாவு
படுகாயம் அடைந்த இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மித்திரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
படுகாயம் அடைந்த கூலித்தொழிலாளி பிரசாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மித்திரன் மற்றும் பிரசாந்த் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.