சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைப்பு
சீர்காழி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமையாளர்கள் பூட்டை உடைத்து மாடுகளை மீட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமையாளர்கள் பூட்டை உடைத்து மாடுகளை மீட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்த அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்ைக விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
7 மாடுகள் பிடித்து அடைப்பு
பின்னர் சாலையில் விடக்கூடாது என எச்சரித்து, உரிமையாளர்களிடம் கால்நடைகள் ஒப்படைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சீர்காழி நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி வளாகத்திற்குள் அடைத்து வைத்தனர். இந்த தகவலை அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் கையில் மண்எண்ணெய் கேனுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பூட்டை உடைத்து மீட்டு சென்றனர்
இதனால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள் மாடுகள் அடைக்கப்பட்டிருந்த நகராட்சி வளாக பூட்டை கல்லால் உடைத்து 7 மாடுகளையும் மீட்டு சென்றனர். நகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்து அடைத்து வைத்திருந்த மாடுகளை பூட்டை உடைத்து உரிமையாளர்கள் மீட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.